எரிபொருள் வரிசை குறையும்: விலை உயராது !!
வெள்ளி அல்லது சனிக்கிழமையின் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வரிசைகள் காணப்படாது என்று உறுதியளித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்த போதிலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் எரிபொருள் கையிருப்புகளை இறக்கும் எண்ணெய் கப்பலுக்கான கொடுப்பனவு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களாக முன்னர் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில் இது 52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும், மக்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.
அடுத்த வாரம் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்கிழமைக்குள் மின்வெட்டு காலம் குறையும் என்றும் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
டீசலுக்கான வரிசைகள் காணப்படுவதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த அமைச்சர், மின் நிலையங்களின் செயற்பாடுகளை தொடர்வதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மார்ச் 5ஆம் திகதி முதல் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்ததாகவும் எனினும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறுகிய கால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறைந்த கொள்ளளவிலேயே இயங்கிவருவதாகத் தெரிவித்த அமைச்சர், 100 சதவீதம் செயற்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.