இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர்!!
இலங்கை பெண்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் என பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சினால் (MoWECP) ஜகர்த்தாவில் இணைய தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட ´ஆற்றல்மிக்க பெண்கள் பேசத் துணிந்தவர்கள்´ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022 சர்வதேச அமர்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
´ஆற்றல்மிக்க பெண்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து உரிமைகளுக்காக போராடுவார்´ என்ற தலைப்பில் பிரதமரின் பாரியார் தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.
பிரதமரின் பாரியார் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
பெண்களை வலுவூட்டுவதில் இலங்கை ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கைப் பெண்கள் தமது குடும்பங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கின்றனர். எனினும் பொதுவாக ஆசிய பெண்கள் தங்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட சமூகப் பாத்திரத்தில் மிகவும் சோகமான தருணங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது உண்மையே.
குடும்பத்தில் பெண்களின் பங்கு அவர்களின் முக்கிய பங்காளிகளுக்கு தெரியாதது துரதிருஷ்டவசமான நிலை. இதன் விளைவாக, நம் பெண்கள் அடிக்கடி பதிவுசெய்யப்படாத குடும்ப வன்முறையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
எமது பெண்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் வெளிநாட்டு வேலைக்காக செல்லும் சந்தர்ப்பம் அதிகம். அவ்வாறு வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களும் ஏராளம்.
நம் சமூகத்தில் அவ்வாறு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் பெண்களுக்கு நாம் செய்யக்கூடிய ஒரே விடயம், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நம்பகமான கடமைகளை ஆற்றுவதே ஆகும்.
இதன்போது வரலாற்று ரீதியாக இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றமையை நினைவுபடுத்த வேண்டும். உலகின் முதலாவது பெண் பிரதமரான கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமான தலைவி ஆவார்.
பெண்களை வலுப்படுத்துவதில் ஆண்களும். பெண்களும் இணைந்து பணியாற்றுவதே முக்கியமானதாகும். தனியாக அன்றி கிராமம் அல்லது சமூக ரீதியான வலுப்படுத்தல் பலமான அடித்தளத்தை உருவாக்கும். இதுவே இந்த அமர்வில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய விடயம்.
இலங்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் எமது சொந்த கலாசாரத்திலேயே காணப்படுகின்றன. சமூக மரியாதையைப் பெறும் சுறுசுறுப்பான பெண்கள் இயற்கையாகவே அதிகாரம் பெற்றவள் என்பது என் நம்பிக்கை.
இலங்கையர்களாக எமக்கு சம வாய்ப்புகள் கிடைத்துள்ளமையும் அதற்காக முன்னோக்கி செல்வதும் முடியுமான காரியமாகும்.
நமது சமூகத்தின் பெண்களுகளை வலுப்படுத்துவது என்பது முழு அமைப்பையும் மேம்படுத்துவதாகும். கல்வி, வேலைவாய்ப்பு அல்லது வேறு எந்தச் செயலிலும் பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு விடயத்தையும் சுதந்திரமாக அடையக் கூடியதாக இருக்க வேண்டும். உயர் வேலை வாய்ப்புகளைத் தொடர பெண்களை ஊக்குவிப்பது குடும்பத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
அடுத்த தலைமுறையை உருவாக்குவது பெண்கள்தான். எனவே, அவர்களை முறையான கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியம் உள்ள தலைமுறையாக உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும். மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் ஒரே உரிமைகள் உரித்தாக வேண்டும்.
இலங்கையில் பெண்களுக்கு கலாசாரத் தடைகள் மிகக் குறைவு. ஆனால் பொருளாதார ரீதியாக பல்வேறு தடைகளை சந்திக்கின்றனர்.
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களை வலுப்படுத்தவும் நம்மைப் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட முடியும். இதைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உயர்தர கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளம் பெண்களின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும். அதேவேளை, உயர்தரத்திலான குழந்தை பராமரிப்பு மற்றும் வேலை செய்யும் தாய்மார்களுக்கான வசதிகள் மிக முக்கியமானவை.
பெண்களுகளை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஒதுக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. அந்த படியை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு நமது நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை நான் காண விரும்புகிறேன்.
துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களே பெண்களின் முழுத் திறனையும் உணர்கிறார்கள். அவள் துணிந்து நிற்பதற்கான பின்னணியை குடும்பத்திற்குள் வழங்குவது நம்பகத்தன்மையை தீவிரப்படுத்துகிறது.
எனவே, பெண்களை வலுப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். உலகில் உள்ள அனைத்து துணிச்சலான பெண்களுடன் இணைந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கும், பெண்களை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் ஒன்றிணைவோம்.
வீட்டுப் பணிப்பெண்கள் முதல் எந்த நாட்டிலும் உயர் பதவி வகிக்கும் பெண்கள் வரை அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கும் சர்வதேச மகளிர் தினமாக அமையட்டும், என பிரார்த்திக்கிறேன்.