பரிசீலனையிலிருந்து விலகினார் நீதியரசர் !!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலிப்பதிலிருந்து விலகுவதாக, உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, இன்று (10) அறிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து குளியாப்பிட்டிய நீவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள பி அறிக்கைக்கு அமைய தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, ஷானி அபேசேகர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதியரசர்களான எஸ்.துரைராஜா, மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் இன்று (10) அழைக்கப்பட்ட போது, இந்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து தாம் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்தார்.
இதனையடுத்து, மனு மீதான பரிசீலனையை ஏப்ரல் 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமஹேவா, திணைக்கத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரன மற்றும் அதன் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக டி சில்வா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய நீவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள பி அறிக்கை மற்றும் மனுவுக்கு அமைய தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தனக்கு 10 கோடி ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் ஷானி அபேசேகர கோரியுள்ளார்.