இலங்கையின் தெலுங்கு மக்களின் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் பணிப்புரை!!
இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
அகில இலங்கை தெலுங்கு கலைஞர்களின் கலாசார சங்கத்துடன் அலரிமாளிகையில் நேற்று (11) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் கே.ஆர்.அனவத்து உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தெலுங்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பிரதிநிதிகள், தெலுங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.
´பிரதமர் அப்போது மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த போது எங்களுக்காக 125 வீடுகளை கட்டிக் கொடுத்தார். மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தற்போது எமது ஏழு கிராமங்கள் உள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் 2015ஆம் ஆண்டு வரை எம்மை பற்றி தேடி பார்த்தபோதும், கடந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. தற்போது எமது குடியிருப்புகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது´ என இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் கே.ஆர்.அனவத்து தெரிவித்தார்.
சுமார் மூன்று மாத காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
இதன்படி இரண்டாம் தலைமுறைக்கு தேவையான காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒழுங்குமுறையின் ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒழுங்குமுறை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாம் தலைமுறைக்கு தேவையான காணிகளை பிரதேச செயலாளர் ஊடாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
தெலுங்கு மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் உரிய பகுதிகளுக்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், பிரதேச செயலாளர் ஊடாக வீட்டுத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கு மக்கள் பிரதிநிதிகளிடம் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
தெலுங்கு கிராமங்களில் சாலைகள் அமைப்பது, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமுர்த்தி சலுகைகள் வழங்குவது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெலுங்கு கலாசார கூறுகளை முன்வைப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்காலத்தில் நடவடிக்கை முன்னெடுக்கும் என பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெலுங்கு மக்களின் கலாசார அம்சங்களை முன்வைப்பதில் தற்போது உள்ள தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.