சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைக்கு…!!
சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த (07) ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட வகுப்பு மாணவர்கள் வார நாட்களில் பாடசாலைகளுக்கு அழைக்கபட்டிருந்தனர்.
அதாவது 20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அனைத்து நாட்களிலும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவாரம் விட்டு ஒரு வாரம் என்ற அடிப்படையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் மாணவர்களை சமமான எண்ணிக்கையில் 03 குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை ,புதிய நடைமுறை தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்.
இன்றைய தினம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது அவர்களுக்கு மேலதிகமாக முக கவசமொன்றை வழங்குமாறு சுகாதர அமைச்சு பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்..