யாழ்ப்பாண மாவட்டத்தில் “இ -கிராம உத்தியோகத்தர்” திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கானகலந்துரையாடல்.!!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளை மையமாகக் கொண்ட அரச சேவையொன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் தொடர்பான அரச கொள்கையொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக, “இ-கிராம உத்தியோகத்தர்” கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர், தெல்லிப்பளை, சாவகச்சேரி, வேலணை, கரவெட்டி ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் இத்திட்டத்திற்காக முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இப்பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (15.03.2022) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்திட்டத்தின் போது பொது மக்களின் வீடுகளுக்கு சென்று வீடுகள், பிரஜைகள் தொடர்பான தரவுகளினை பெற்றுக்கொள்வதற்காக தகவல் சேகரிக்கும் உத்தியோகத்தர்கள் பிரதேச மட்டத்தில்
நியமிக்கப்பட வேண்டுமெனவும் தரவுகளை மென்பொருளில் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு தரவுகள் சேகரிப்பது தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணர்வூட்டுவதுடன் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் கடிதத்தினை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரின் கையொப்பத்துடன் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள், கிராம நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”