’எவரேனும் மரணித்தால் பசிலே பொறுப்பு’ !!
புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்துக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
மக்கள் வரிசைகளில் நிற்கும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் நிதியமைச்சரின் தவறுகளினால் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு பெரும்பாலான பொதுமக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு பொருட்களை இறக்குமதி செய்ய 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும், அதில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்காக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த நிதியமைச்சர் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.