இலங்கையின் உற்ற நண்பனாக என்றும் இருப்பது இந்திய அரசாங்கமே!!
இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட்டதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பக்கத்தில் இருக்கின்ற எங்களுடைய அண்டைய நாடான இந்தியாவை விட்டு விட்டு எங்கோ இருக்கின்ற சீனர்களை நாம் ஆதரிக்கின்றோம். அவர்கள் எங்களுடைய நாட்டின் அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்க காத்திருக்கின்ற ஒரு கூட்டம்.
இந்தியாவும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது. பௌத்த மதம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வந்தது. அதே போல எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் அங்கே எமக்காக குரல் கொடுக்கின்றார்கள். எங்களுடைய கலை கலாச்சாரம் பண்பாடு என்பன இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பயணிக்கின்றது.
மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு எங்களுடைய மலையகத்திற்கு விஜயம் செய்து தொப்புள் கொடி உறவுகளை அவர் சந்தித்தார். அவர்களுக்காக பல அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கு முன்வந்தார்.
மோடி அரசாங்கத்துடன் நாம் இணைந்து பயணித்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் பல நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அதே போல இலங்கை நாட்டிற்கு பிரதமர் மோடி விஜயம் செய்ய இருப்பது பாரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
எனவே இவ்வாறான ஒரு நிலைமையில் நாங்கள் இந்தியாவை அரவனைக்க வேண்டும்.கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்யப்பட்டது. இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கு எதிராக போராட்டம் செய்யப்பட்டது. அதனால் நாம் பெற்றுக் கொண்ட நன்மை என்ன? ஒன்றுமில்லை. ஆனால் சீனா இந்த நாட்டில் என்ன செயதாலும் அதனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எனவே நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். சீனா எங்களுக்கு கொடுத்த அத்தனை பணத்திற்கும் ஏதோ ஒரு வகையில் நாம் எங்களுடைய நாட்டின் வளங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றோம். ஆனால் இந்தியா அப்படி இல்லாமல் அநேகமான உதவிகளை இலவசமாக செய்கின்றது.
எனவே இந்த விடயங்களை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் நாம் இந்திய அரசாங்கத்துடன் இனக்கமாக செயற்பட்டு எங்களுடைய பிரச்சினைகளக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பிரதமர் மோடியின் வருகை எங்களுடைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விடிவாக அமைய வேண்டும் அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.