உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்பு- ஜி ஜின்பிங் அழைப்பு…!!
உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சீன அதிகர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்
அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா-சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
‘தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. உலகம் அமைதியாகவோ, நிலையானதாகவோ இல்லை. உக்ரைன் நெருக்கடி நாம் பார்க்க விரும்பும் ஒன்றல்ல. போர்க்களத்தில் சந்திக்கும் நிலைக்கு நாடுகள் வரக்கூடாது என்பதை மீண்டும் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன’ என்றும் சீன அதிபர் கூறினார்.
சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளைக் கருத்தில் கொண்டு, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா விமர்சித்து வரும் நிலையில், சீன அதிபரின் இன்றைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.