உக்ரைனில் ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்- 40 பேர் பலி…!!
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீடிக்கிறது.
உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கீவ் நகரை 3 முனைகளிலும் சுற்றி வளைத்துள்ள ரஷிய ராணுவம் புறநகர் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கீவ் நகருக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். மேலும் கீவ்வில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
ஆனால் ரஷிய படைகளை முன்னேறவிடாமல் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதலை நடத்தி வருகிது. இதனால் கிவ் புறநகர் பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் புறநகர் பகுதிகளை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் கீவ் நகருக்கு வெளியே ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ்வின் புறநகர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களை ரஷிய படையிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டு உள்ளது.
மேலும் கீவ் நகரை நெருங்கி வந்த ரஷிய படைகளை 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு பின் நோக்கி செல்ல வைத்து இருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு கீவ் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய படைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் மிக்கோலெவ் நகரில் உள்ள ராணுவ தளம் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தளத்தை குறி வைத்து சரமாரி ஏவுகணை வீசப்பட்டன.
இதில் ராணுவ தளத்தில் இருந்த கட்டிடங்கள், உள் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. இந்த ஏவுகணை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை ரஷிய ராணுவம் தாக்கி அழித்தது. மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடந்த தியேட்டர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் அக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.
அங்கு சிக்கி கொண்ட மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நேற்று 130 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்கள் கடுமையாகவே இருந்து வருகிறது.