நாடுமுழுவதிலும் டீசலை விநியோகிக்க நடவடிக்கை !!
இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிவந்த கப்பலில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டன.
40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிவந்த கப்பல் நேற்று முன்தினம் (20) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் இருந்து எரிபொருளை விரைவாக இறக்கி அதனை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை இக்கப்பலில் இருந்து பெறப்படும் டீசலின் ஒருபகுதியை இலங்கை மின்சாரசபைக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் 22 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பலும் இலங்கையை வந்தடையும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நாடுமுழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.