யாழ் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல் இரகசியமாக செல்கிறார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எல்லாவற்றிற்குமே வரிசையில் நிற்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. பால்மா மற்றும் எரிவாயு சிலிண்டர், எரிபொருட்களை பெறுவதில் பாரிய பிரச்சனையே காணப்படுகின்றது. கல்வித்துறையில் வினாத்தாள்களை பெற்றுக் கொள்வதற்கு கூட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நெருக்கடி மேலும் மோசமடைய கூடிய வாய்ப்பை காணப்படுகின்றது இந்த ஆட்சியை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். முழு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரண்டு உள்ளார்கள். ஜனாதிபதியின் உரை என்பது பழைய குருடி கதவை திறடி என்பது போன்று பழைய புராணங்களை பாடும் ஒன்றாகவே காணப்பட்டது. ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை தங்கள் தீர்க்க முடியாது போகும்போது கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தும் நிலையே காணப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் உரையும் முன்னைய அரசாங்கங்களை குற்றம் சாட்டுவதாகவே காணப்படுகிறது.
மருந்துப் பொருட்களின் விலைகள் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.
மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த தற்போது மூடப்பட்டு காணப்படுகிறது. எல்லா பிரச்சினையை தீர்ப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது இரண்டு வருடம் கடந்த பின்பும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.
மக்கள் நெருக்கடியில் தவிக்கின்ற போது அமைச்சர்களோ சொகுசு வாழ்க்கையிலும் நீர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். எமது நாட்டை இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் கிடைத்திருக்கின்றது.
யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது.
74 வருடங்களாக இதே திருட்டு கும்பலே இந்த நாட்டை ஆட்சி செய்தது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்திற்கான செயற்பாட்டை மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக நாடு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்களை செய்து வருகின்றோம்- என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”