‘நாட்டில் பொருளாதார நோய்’ !!
தற்போதைய காலகட்டத்தில் நாட்டிலே பொருளாதார நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நோய்க்கான நிவாரணத்தை ஜனாதிபதியால் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இந்தப் பொருளாதார நோய்க்கும் மேலாக எங்களது உரிமையைப் பெறுவதற்கான நோய் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு வைத்தியர் க.விஸ்வலிங்கம் எழுத்திய “நோய் நிவாரணி” எனும் நூல் வெளியீட்டு விழாவும் சித்த வைத்திய முகாமும், மட்டக்களப்பு, பழுகாமம் சிவன் கோவில் முன்றலில் நேற்று (20) நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நோய் நிவாரணி என்ற புத்தகம் உண்மையிலேயே எங்களது தமிழ் இனத்துடன் சம்பந்தப்பட்ட புத்தகமாக நான் பார்க்கின்றேன்.
“ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அகிம்சைப் போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள் நடந்தி, 2009ஆம் ஆண்டு எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும்கூட அந்த நோய்க்கான நிவாரணம் கிடைக்காமல்தான் தற்போது வரை நாங்கள் இருக்கின்றோம்.
“அந்த நிவாரணத்தை நாங்கள் எங்கு யாரிடம் இருந்து பெறுவது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற ஏனைய கட்சிகள்கூட என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது.
“அந்த வகையில்தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எந்தவோர் அரசாங்கமும் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நிவாரணத்தையும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றார்” என்றார்.