பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் நடந்த வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 கிரிக்கெட் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடந்த இப் போட்டியில் நாணயசுழற்சியில் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி பெற்றது.
இதன்படி அந்த அணியின் தலைவர் எ.எவ்.டெஸ்வின் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 14.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.
அணி சார்பில் அதிகப்படியாக எஸ்.கீர்த்தனன் 16 ஓட்டங்களையும், ஏ.எவ்.டெஸ்வின் 10 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரர்களும் இரட்டை ஓட்டங்களை கூட பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பில் பந்துவீசிய கே.சாம்தீசான் 3 ஓவர்களை வீசி 10 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்ளை வீழ்த்தினார். எஸ்.மதுசன் 2 ஓவர்களை வீசி 6 ஓட்டங்களை கொடுத்த இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பா.பிரிந்தன் 3 ஓவர்களை வீசி 9 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
49 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினர் 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தை தனதாக்கியது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பில் என்.விஸ்னுகாந் 16 ஓட்டங்களையும், கௌசிகன் 10 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
புனித பத்திரிசியார் கல்லூரி அணி சார்பில் பந்து வீசி எம்.சவுத்திகன் 4 ஓவர் பந்துவீசி 2 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். எஸ்.கீர்த்தன் 4 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை கொடுத்த இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். எ.எவ்.டெஸ்வின் 3 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களை கொடுத்து ஒரு வீட்கெட்டையும் கைப்பற்றினார்.
இப் போட்டியில் சகலதுறை வீரராக புனித பத்திரிசாயார் கல்லூரி அணியின் எஸ்.கீர்த்தனன் தெரிவு செய்யப்பட்டார். ஆட்டநாயகணாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் என்.விஸ்னுகாந் தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களின் கிரிக்கெட் போட்டி நடைபெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”