#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- வெடிகுண்டு தாக்குதலுக்கு ரஷிய பத்திரிக்கையாளர் உயிரிழப்பு…!!
06.30: உக்ரைனில் ரஷிய படையினர் போர்க் குற்றம் இழைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ள நிலையில், ரஷியாவை எதிர்த்து போரிட ஆயுதங்கள் வேண்டும் என்று நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
04.20: உக்ரைனில் போர் செய்தி சேகரிக்க சென்ற ரஷிய பத்திரிகையாளர் ஒக்ஸானா பவுலினா வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலின் போது அவர் உயிரிழந்தார்.
03.20: உக்ரைனில் நான்காவது வாரமாக நடைபெறும் போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
01.20: உக்ரைனில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷியாவை நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. பாதுகாப்பு உதவி மற்றும் உபகரணங்கள் உதவி உட்பட உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு உறுதியளித்துள்ளது.
23-03-2022
23.50: ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாளை நடைபெறும் ஜி-7 மற்றும் நேட்டோ அமைப்பு ஆலோசனை கூட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
22.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
20.40: இந்தியா வந்துள்ள கிரீஸ் வெளியுறவு மந்திரி நிகோஸ் டென்டியாஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இருவரும் விரிவாக பேசினர்.
20.10: அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
19.50: ரஷியாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைனில் இருந்து 36 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. சபை கூறியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத கால போர் நீடித்தால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
17.50: ஜி20 அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்கும் முயற்சியை சீனா நிராகரித்துள்ளது. ஜி20 அமைப்பு, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மன்றம், அதில் ரஷியா ஒரு முக்கியமான உறுப்பினர், மற்றொரு நாட்டை வெளியேற்ற எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என சீன வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.
17.20: ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ரஷிய தூதர் கூறினார். உக்ரைன் போர் காரணமாக, ரஷியாவை ஜி20 அமைப்பில் இருந்து வெளியேற்றலாம் என்ற பரிந்துரைகளை அவர் நிராகரித்தார்.
17.00: செர்னோபில் அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்துள்ள ரஷிய படையினர், அந்த இடத்திலுள்ள ஒரு ஆய்வகத்தை சூறையாடி அழித்துவிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
16.00: 45 ரஷிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்ற போலந்து தயாராகி வருகிறது.