’அரசாங்கத்தை அனுப்ப தேர்தல் தேவையில்லை’ !!
தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தேர்தல் தேவையில்லை என்று தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, உலகில் எந்தவோர் அரசாங்கத்தையும் மக்கள் சக்தியினால் கவிழ்க்க முடியும் என்று தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக நுகேகொடையில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டரை வருடங்களும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு மூன்று வருடங்களும் உள்ள போதிலும், மக்கள் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியமாகும் என்றார்.
தேர்தல் மூலம் அரசாங்கம் மாற்றப்படுவது வழமையாக இருப்பினும் எந்த அரசியலமைப்பு விதிகளையும் விட மக்கள் சக்தி மிகப் பெரியது என்று தெரிவித்த அவர், தற்போதைய அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எனவே தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 18 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள போதிலும் இதுவரை 21 அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.