;
Athirady Tamil News

வங்கிக் கட்டமைப்பு அபாயத்தில்: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!!

0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றம் தொடர்பில் கரிசனை கொள்ளாது செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்றும் சபையில் குற்றம் சுமத்தினர்.

சேவைகள் பிரிவின் VAT திருத்தம் தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் சபையில் இருக்கவில்லை.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், தெரிவுக்குழுவின் தலைவர் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் நாணய சபை உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பிரச்சினைகளை மாநாடுகள் மூலம் அல்லாது பாராளுமன்றத்தில் விவாதித்தே தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அதுவே நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதாகவும் ஹர்ஹ டி சில்வா தெரிவித்தார்.

சட்டங்களை வகுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதாக இருந்தாலோ, குறைப்பதாக இருந்தாலோ அதனை பாராளுமன்றத்திற்குள் மாத்திரமே செய்ய முடியும் என கூறினார்.

இன்று நிதி தெரிவுக்குழுவிற்கு நிவாட் கப்ராலும் நாணயக் குழுவினரும் வருகை தராமை, பாராளுமன்றத்தை முழுமையாக நகைப்பிற்குட்படுத்தும் செயல் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நிதி அமைச்சர் வருவதும் இல்லை, கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை என தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, பிரச்சினைகளை யாரிடம் கூறுவது எனவும் கேள்வி எழுப்பினார்.

வங்கிக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் என தாம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்த போதும், அது குறித்து எவரும் அக்கறைகொள்ளவில்லை எனவும் தற்போது அரச வங்கியொன்று பணத்தை மீள செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் உடனடியாக அது குறித்து ஆராயுமாறும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

டொலரை 200 ரூபாவிற்கு மேல் விற்க முடியாது என முட்டாள்தனமான சட்டமொன்றை பிறப்பித்திருந்தனர். வங்கிகள் 200 ரூபாவிற்கு மேல் கறுப்பு சந்தையில் அதனை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பில்லை. ஆனால், அவர்களுக்கு டொலர் தேவை. சில வங்கிகள் 200 ரூபா வீதம் அதனை கொள்வனவு செய்து, மூன்று மாதங்களில் 185 ரூபாவிற்கு அவற்றை விற்பனை செய்வதாக தெரிவித்து Swap செய்தனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது, இவ்வளவு பணம் அச்சிடுகின்றனர், அதனால் ரூபாவின் பெறுமதி குறைவடையும் என்பதை நாம் அறிவோம். அப்படியாயின், 200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் போது 201 ரூபா அல்லது 202 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவே உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் 185 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அந்த வங்கிகள் அறிவித்தன. இதன் மூலம் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பும் வீழ்ச்சி காணும் அபாயம் உள்ளதாக நான் அன்றே தெரிவித்தேன்

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ கருத்துக்களை வௌியிடவோ இல்லை.

இதேவேளை, வங்கிக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வௌியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

வங்கி கட்டமைப்பு நிலையாக உள்ளதாகவும் அரச வங்கிகளின் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கி உறுதிப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.