;
Athirady Tamil News

கோப் குழுவில் வௌியான உண்மை

0

போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபா கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) புலப்பட்டது.

கடன் பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் இன்னமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குழுவிற்கு சமுகமளித்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக இது தொடர்பில் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இதனுடன் தொடர்புபட்ட வெளிநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த கடனை மீள வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் நேற்று (23) கூடியபோதே இவ்விடயங்கள் வெளிக்கொணரப்பட்டன.

அதேநேரம், இவ்வருடங்களில் வீட்டுக் கடன்கள் அதிகம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு வழங்கப்படும் கடன்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இங்கு சமுகமளித்திருந்த குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் நோக்கம் இதுவே என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் கவனம் செலுத்தி சிறிய தொழில்முயற்சிகள் பலவற்றுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வங்கியில் தற்பொழுது காணப்படும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நிறைவேற்றுத் தரத்தில் காணப்படும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும், சில நிறைவேற்றுத்தர பதவிகளுக்கு பொருத்தமான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதில்லையென்றும், ஒரு சிலர் நியமனங்களைப் பெற்று சிறிது காலத்தில் விலகிச் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பதவிகளுக்கான சம்பளம் போதுமானதாக இல்லையாயின் அதில் திருத்தங்களைக் கொண்டுவந்து வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கி 30 வருடங்களாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தானியங்கி வங்கி அமைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.