;
Athirady Tamil News

காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்!!

0

“கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்” என கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

“தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்டங்களில் வாழுகின்ற மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தியது. அதன்படி, தோட்டங்களில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி வீட்டை அமைத்துக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரச கொள்கையாக வகுக்கப்பட்டது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெறப்பட்டது, காணிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆரம்ப விடுவிப்பு பத்திரமும் வழங்கப்பட்டது. இன்று, அப்பத்திரங்களை பறித்து, அழித்தொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் இந்த சதி திட்டத்தை நிறுத்துங்கள்.”

கடந்த நல்லாட்சி காலப்பகுதியில், தோட்டங்களில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு குறைந்தபட்சம் 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தோட்ட மக்கள் வாழுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் இவ்வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள அரச பெருந்தோட்டங்களில் 8000 த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு காணி துண்டுகள் பிரித்து வழங்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக, காணிகள் இனங்காணப்பட்டு, அளவிடப்பட்டு, உரிய அரச தோட்டங்களின் நிர்வாகத்திலிருந்து உத்தியோக பூர்வமான விடுவிப்பு ஆவணம் வழங்கப்பட்டது. அதன்படி, இனம் காணப்பட்ட குடும்பங்களுக்கு காணி துண்டுகள், குறித்து ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட காணி துண்டுகளில் இன்று பலரும் தனி வீடுகளை அமைத்து குடியேறியுள்ளனர்.

இக்காணி துண்டுகள் தொடர்பாக, அரச பெருந்தோட்டங்களில் இருந்து வழங்கப்பட்ட உரித்தாவனத்தை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் (LRC) முன்வைத்து, இறுதி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக, அரச பெருந்தோட்டங்களில் இருந்து வழங்கப்பட்ட விடுவிப்பு ஆவணம் செல்லுபடியற்றது என கூறி, அதனை மக்களிடம் இருந்து மீள பறித்து அழித்தொழிக்கும் சதி திட்டம் நடைபெற்று வருகின்றது. இது மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதாரத்தை அழித்தொழிக்கும் வேலை ஆகும். அது மட்டுமல்லாது, ஆவணங்களை பறித்துக்கொண்டு, நாம் மக்களுக்கு ஒதுக்கிய காணிகளை வேறு வேலை திட்டங்களுக்கு பகிர்ந்து ஒதுக்கும் வேலையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி கலபொட தோட்டம், ஹந்தானை தோட்டம் மற்றும் கிரேட் வெளி தோட்டங்களில் இது நடைபெற்று வருகிறது. அன்று ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் அனைத்தையும் செய்யலாம் என மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றார்கள். இன்று அம்மக்களை இன்னுமொரு கூட்டம் ஏமாற்றி கையில் உள்ளதை பறித்துக்கொள்கின்றர்கள். ஆனால் அரச அதிகாரத்தில் உள்ளவர்களை காணவில்லை. இதனை தடுத்து நிறுத்தும் இயலுமை இல்லையா? இல்லை, இவர்களது ஒத்துழைபோடா இது நடைபெறுகின்றது? என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

புதிதாக காணி துண்டுகளை பகிர்ந்து வழங்கும் இயலுமை இவர்களுக்கு இல்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், பகிர்ந்து வழங்கப்பட்ட காணிகளை மீள பறித்து வெளியாருக்கு கொடுப்பதற்கு துணை போவது சமூக துரோகமாகும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.