இந்தியா செல்லும் இலங்கை அகதிகளுக்காக குடியிருப்பு அமைக்கும் பணிகள்…!!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னாா், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 16 போ் கடந்த 22 ஆம் திகதி அகதிகளாக தனுஷ்கோடி சென்றனா். அவா்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழா்கள், தமிழகம் வரத் தயாராக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்திருந்தனா்.
இதைத்தொடா்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அவா்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் மண்டபம் மறுவாழ்வு முகாமில் உள்ள 147 வீடுகளின் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடுகளில் மின் இணைப்பு, குடிநீா், கழிவறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் தனித்துறை ஆட்சியா் சிவகுமாரி, ராமநாதபுரம் வட்டாச்சியா் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் ரவி, மண்டபம் பேரூராட்சி தலைவா் டி.ராஜா, கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பணிகளை பாா்வையிட்டு துரிதப்படுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.