அரசாங்கத்தோடு இணைந்திருப்பது ஆத்ம திருப்த்தியை தருகிறது !!
பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதை விட்டு விட்டு, இதை வைத்து அரசியல் செய்வதை கட்சித் தலைவர்கள் கைவிட வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
கற்பிட்டி நுரைச்சோலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக என்னை புத்தளம் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பவில்லை எனவும் தெரிவித்தார்.
எனது கட்சியை விட மக்களின் அபிலாஷைகளே எனக்கு முக்கியம் எனக் கருதி , எனது மாவட்ட மக்களின் அங்கீகாரத்தோடு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதோடு, புத்தளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்குப் பணியாற்றுவது ஆத்ம திருப்த்தியை தருவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கிறது. எனவே நாட்டின் தற்போதைய நிலையில் இது அரசியல் செய்யும் காலம் அல்ல எனவும் தெரிவித்தார்.
எல்லோரும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றை எடுக்காது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு நாட்டை மீட்பது எனவும் கேள்வி எழுப்பினார்.