சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் அரசாங்கத்துடன் பேசுவதென்பது தற்கொலைக்கு ஒப்பானது – எம்.கே.சிவாஜிலிங்கம்!!
அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச சொன்னால் அவர்களை மத்தியஸ்தம் வகிக்க சொல்லி கூறுங்கள். அதைவிடுத்து எந்தவித சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் அரசாங்கத்துடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு ஒப்பானதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு சுற்று பேச்சுவார்த்தை முடிவிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இலங்கை அரசாங்கம் எதை ஒப்புக் கொண்டது என்பது தொடர்பாக தமிழ் கூட்டமைப்பே தெரிவிக்கின்றது. ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தை தொடர்பாக எதனையும் கூறவில்லை.
இலங்கையில் எதுவாக இருந்தாலும் சர்வதேச அழுத்தத்தின் மூலம எமக்கு கிடைக்கும். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக அரசாங்கம் பேச்சு நடத்துமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடன்படக்கூடாது.
பேச்சுவார்த்தை என காலத்தை ஓட்டிக்கொண்டு செல்லாமல் நிகழ்ச்சிநிரலை தயாரித்து செயற்பட வேண்டும்.இல்லையேல் ஈழத் தமிழினம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் என்ற கதையாகத்தான் இருக்கும்.
தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யாதுள்ளவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியும்.இதில் உள்ள பிரச்சனை என்றால் சிலர் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் மாத்திரம் அந்த மேன்முறையீடுகளை மீளப்பெற்றால் மாத்திரம் அவர்களுக்கான பொது மன்னிப்பை ஜனாதிபதியால் வழங்க முடியும்.ஆகவே இதை செய்வதற்கு ஒரு வாரம் இரண்டு வாரங்களுக்கு மேல் எடுக்கபோகின்றீர்கள் என்றால் வருத்தத்திற்குரியது.
காணி சுவீகரிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கும் இராணுவத் தளபதிக்கும் புலனாய்வு அறிக்கை செல்லவில்லை என்றால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தல்களை ரத்து செய்ய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”