அரசாங்கத்தைப் பிணையில் எடுக்க கூட்டமைப்பு தயாராகிறது !!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் இதனையே வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமாக அரசியல் பிரச்சினை ஒன்றோ, அல்லது அன்றாடப் பிரச்சினைகளோ இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை எனவும் தெரிவித்தார்.
தான் தனி சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதையே ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளான காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களிள் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தும் கூட, எந்தவிதமான நகர்வையும் முன்னெடுக்க அரசாங்கம் அக்கறை காட்டவில்லை எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மிருசுவிலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனைக்குள்ளான இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அரசாங்கம் எவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகும் என்பதற்கு இவை இரண்டும் மட்டுமல்ல மேலும் பல உதாரணங்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கிளர்ச்சியொன்று வெடிக்கலாம் என்பதால், இப்பின்னணியில் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்துகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இரண்டரை வருடங்களாக கூட்டமைப்புடன் பேச்சை தவிர்த்து வந்த ஜனாதிபதி அவசரமாக அவர்களைப் பேச்சுக்கு அழைத்தார். கூட்டமைப்பும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுக்கு சென்றிருக்கின்றது.
இது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமாகவுள்ள மேற்கு நாடுகளின் உதவியைப் பெறுவதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசு போடும் நாடகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணைபோகின்றதா என்ற கேள்வியைத்தான் எழுப்புகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.