கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றத்தில் இருவர் கைது – உதவிய இராணுவ சிப்பாய்களுக்கு வலை வீச்சு!!
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இரும்புகளை திருடி விற்பனை செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலையில் இரும்புகளை திருடி விற்பனை செய்தவரும் , இடை தரகர் ஒருவருமே காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரும்பினை விற்பனை செய்தவருக்கு இராணுவ சிப்பாய்கள் சிலர் இரும்பை திருடுவதற்கு உதவிகள் வழங்கி வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதை அடுத்து ,உதவி வழங்கிய இராணுவ சிப்பாய்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , காங்கேசன்துறை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் இருந்த ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு கொழும்பில் விற்பனை செய்து வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கும் திருட்டில் இராணுவத்தினர் உதவிகளை வழங்கி இருந்தமை பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”