வவுனியா செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடரும் காடழிப்பு: திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!! (படங்கள்)
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடர்ந்தும் காடழிப்பு இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (28.03) மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரமனாலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கூழாங்குளம் பகுதியில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட காட்டுப் பகுதி வவுனியா நகரப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
அங்குள்ள பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் துணையுடன் காட்டுப் பகுதிகளில் வேலைகளையிட்டு, பின்னர் காணிகளை படிப்படியாக துப்பரவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. குறித்த நபர்கள் அங்குள்ள அதிகாரி ஒருவருக்கு மிக நெருக்கமானவர் எனவும் தெரியவருகிறது.
குறிப்பாக யுத்தம் காரணமாக பாதிப்படைந்து மீள்குடியேறியுள்ள கன்னாட்டி, கூழாங்குளம், கணேசபுரம், நீலியாமோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் தமது விவசாயம் மற்றும் வாழ்வாதார தேவைக்காக போதியளவிலான நிலமின்றி அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், பெரிய பண முதலைகள் வேறு பகுதியில் இருந்து சென்று அப் பகுதியில் அரச அதிகாரிகளின் துணையுடன் காடழித்து நிலங்களை அபகரித்து வருகின்றனர்.
இது தொடர்பில் மக்களால் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் காடழிப்பு நடவடிக்கைகளும், அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்படவில்லை. இது தொடர்பில் எனக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன், வனவளத் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி காடழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கும் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் செட்டிகுளம், சின்னசிப்பிக்குளம் பகுதியில் இவ்வாறு 100 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தியிருந்தேன். இவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரச அதிகாரிகள் தொடர்ச்சியான காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.