வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்!! (படங்கள்)
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை அலுவலகர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் உள்ளீட்டவர்கள் சம்பள உயர்வு உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29.03.2022) அதிகாலை 5.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடிப்படை சம்பளத்தில் 10,000ரூபா அதிகரிப்பு , வாழ்க்கைப்படியினை 7,500 ரூபாவாக உயர்த்துதல் , இடைக்கால கொடுப்பனவான 5000 ரூபா நிரந்தமாக்குதல் , அதிகாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும் , வருடாந்த வேதன உயர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்ததுடன் முன்அறிவித்தல் இன்றிய பணிப்புறக்கணிப்பு காரணமாக பேரூந்து இன்றி நீண்ட நேரம் மக்கள் காத்திருந்தமையும் காணக்கூடியதாகவிருந்தது.
தொழிற்சங்க அதிகாரி ஒருவர் சம்பள உயர்வு தொடர்பில் ஊழியர்களிடம் கலந்துரையாடுவதற்காக நேற்றையதினம் இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற சமயத்தில் சாலை முகாமையாளரினால் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த தொழிற்சங்க அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சங்க அதிகாரி ஒருவர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சாலை முகாமையாளர் புஞ்சி பண்டாகே மோகன் பிரசாந்த உலுக்குலம அவர்களிடம் வினாவிய போது , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என அவ்விடத்திலிருந்து சென்றார்.
சம்பள உயர்வுக்கான இவ் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைத்து சாலையினதும் ஒத்துழைப்பினையும் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா சாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.