இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா? நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 31ம் தேதி விவாதம்….!!
பாகிஸ்தானின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன், இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நம்பிக்கையில் இல்லா தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய சபையில் மனு அளித்த பின்னர் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற நிலை உருவானது. இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதால் ஆட்சி நெருக்கடி ஏற்பட்டது. இம்ரான் கான் பதவி விலகுவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இம்ரான் கான் பதவி விலகவில்லை. மாறாக, தனது பலத்தை காட்டும் வகையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சபையில் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரிப் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 161 உறுப்பினர்கள் உள்ளனர். தீர்மானம் மீது 31ம் தேதி (வியாழக்கிழமை) விவாதம் நடத்தப்படும். விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
342 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபையில், தீர்மானம் வெற்றி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இம்ரான் கான் பதவியில் நீடிக்க முடியும்.