வன்முறைகள் தீர்வை தராது – அங்கஜன் இராமநாதன்!!
தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வன்முறை இல்லாமல் போராட்டங்களை மேற்கொண்டே தீர்வை பெறலாம் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டமை தொடர்பாக இன்றைய தினம் ஊரெழுவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
நேற்று ஒரு சில அசாதாரண சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றது. மிகப்பெரிய சவாலான நிலைமை இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. விலைவாசிகள் உயர்ந்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, மின்சாரம் இல்லை, வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது. இயல்பு வாழ்க்கைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கஷ்டமான விடயம்.
ஆனாலும் யாழ் மாவட்ட மக்களை பொறுத்தவரை இது புதிதல்ல. இது தெற்கு மக்களுக்கு புதியதொரு சம்பவமாகவே இருக்கும். நேற்று அதற்காக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று அது வன்முறையாக மாறி இருக்கின்றது.
கடந்த காலத்தில் நாங்கள் வன்முறையில் இருந்து வந்த மக்கள் மீண்டும் அதனை நோக்கிப் போக கூடாது என்பது என்னுடைய விருப்பம். மக்களுடைய போராட்டத்தின் வேதனையை உணரக்கூடியதாக இருக்கின்றது. போராட்டத்தை அமைதியாக செய்ய வேண்டும். வன்முறை இல்லாமல் போராட்டங்களை செய்து தீர்வை நோக்கி செல்ல முடியும். எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எங்களால் முடிந்த ஆலோசனைகளை முயற்சிகளை வழங்கி ஒரு தீர்வை காண வேண்டுமே தவிர வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.
யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய உதவியாலும் மக்களால் நான் தெரிவு செய்யப்படவில்லை. மக்களால் மட்டுமே நான் தெரிவு செய்யப்பட்டேன். எந்த ஒரு அரசாங்கத்திற்கும் தலைவருக்கு வக்காலத்து வாங்க வேண்டியது எனது நோக்கமல்ல. தற்போதுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”