அவசரகால சட்டம், ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு விளக்கமளிக்கும் அரசாங்கம்!!
அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பேணவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு பல தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் , அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பேச்சு சுதந்திரம், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் போலவே நாட்டில் அமைதி மற்றும் அரச, தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடும் அரசாங்கத்திற்கு உண்டு.
பேச்சுச்சுதந்திரம், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்குமான சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தி ஊக்குவிப்பது அரசாங்கம் உறுதிமொழி வழங்கி அங்கீகரித்திருக்கின்ற கொள்கையாகும். கடந்த இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலத்தில் அது நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் எந்தவொரு அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கும் அல்லது கண்டனப் பேரணிக்கும் பொலிஸ் தாக்குதல், கண்ணீர்ப்புகைத் தாக்குதல்கள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து பிரச்சினைகளைக் கலந்துரையாடி தீர்வுகளும் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனப் போராட்டங்களுக்கென ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் வேறானதொரு பிரதேசமும் ஒதுக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மிரிஹானை பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒருசிலரால் கலகம் விளைவித்து பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருசிலர் காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
சேதம் விளைவிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 39 மில்லியன் ரூபாய்களாகும். அங்கீகரிக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவசரகால மற்றும் ஊரடங்கு சட்டம் பொது அமைதியைப் பேணவும், அரச மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
ராஜபக்சக்களின் முதல் விக்கட் வீழ்ந்தது; நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!!
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!
யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)
அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!