தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் மீட்டு வந்த போலீஸ்காரர்…!
ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3-ந்தேதி கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அந்த வீட்டின் உள்ளே சிக்கி 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார், மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினர். அந்த தாயின் மடியில் குழந்தை இருந்தது. குழந்தையை தீயில் இருந்து காப்பாற்ற ஒரு துணியில் குழந்தையை தாய் சுற்றினார்.
அப்போது அங்கு 31 வயதான போலீஸ்காரர் நேத்ரேஷ்சர்மா மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். தீயில் சிக்கியபடி குழந்தை மற்றும் 3 பெண்கள் கதறியதை பார்த்த நேத்ரேஷ் சர்மா தீயை அணைத்தபடி வீட்டுக்குள் ஓடினார்.
துணியால் போர்த்தப்பட்டு இருந்த குழந்தையை தாயிடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். கதறிய குழந்தையின் தாய் மற்றும் 2 பெண்களையும் தீயில் இருந்து தப்பிச்செல்ல உதவினார்.
வீடு தீப்பிடித்து எரியும் நிலையில் தீவிபத்தின் மத்தியில் போலீஸ்காரர் நேத் ரேஷ்சர்மா குழந்தையுடன் ஓடிவரும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த ராஜஸ்தான் அரசும், காவல்துறையும் போலீஸ்காரர் நேத்ரேஷ் சர்மாவின் செயலை பாராட்டி வருகின்றன.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட், ‘மற்றவர்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த போலீஸ்காரர் நேத்ரேஷ் சர்மாவின் துணிச்சலையும், மனித நேயத்தையும் பாராட்டினார். பின்னர் அவரை நேரில் அழைத்து பாராட்டியதுடன் போலீஸ் ஏட்டு ஆக பதவி உயர்வு அளித்து கவுரவித்தார்.
தீயில் சிக்கிய குழந்தையை மீட்டு கொண்டுவந்த நேத் ரேஷ்சர்மா ராஜஸ்தான் மாநில மக்களை நிகிழ வைத்துள்ளார். இதுகுறித்து நேத்ரேஷ் சர்மா கூறியதாவது:-
தீவிபத்தில் குழந்தையையும், 3 பெண்களும் சிக்கி இருப்பதை பார்த்ததும் அவர்களை மீட்க வீட்டுக்குள் ஓடினேன். என் கண்முன்னே 4 பேரும் தீயில் சிக்கி கதறிக்கொண்டிருந்தனர். நான் என் உயிரை இழந்தாலும் பரவாயில்லை. அவர்களை காப்பாற்றுவது எனது கடமை என்று நினைத்தேன். எனக்கு என்ன நேரும் என்று யோசிக்க எனக்கு நேரமில்லை.
குழந்தை மற்றும் பெண்களின் முகத்தில் இருந்த பரிதவிப்பை என்னால் மறக்கவே முடியாது. நான் வீட்டுக்குள் சென்றபோது குழந்தையும், 3 பெண்களும் மோசமான நிலையில் இருந்தனர்.
நான் குழந்தையை என் கையில் எடுத்துக்கொண்டு என் பின்னால் வாருங்கள் என்று 3 பெண்களிடமும் சொன்னேன். அவர்களும் வெளியே ஓடி வந்தனர். எரியும் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக கொண்டு வந்து குழந்தையை தாயிடம் ஒப்படைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.