சரத்பவார் அளித்த விருந்தில் நிதின் கட்கரி, சஞ்சய் ராவத் பங்கேற்பு…!!
பாராளுமன்ற மக்களவை செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தலைநகர் டெல்லி வந்துள்ளனர்.
அவர்களுக்கு தனது வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இரவு விருந்து அளித்தார். அந்த விருந்தில் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, சிவசேனா தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் மூத்த எம்.பியுமான சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் பங்கேற்ற மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான், இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற ஒரு சந்திப்பு என குறிப்பிட்டார்.
முன்னதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தனது வீட்டில் நேற்று மாலை அளித்த தேநீர் விருந்தில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நில பேரம் தொடர்பான பணமோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு சொந்தமான ரூ.11.15 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்வதாக மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவர், சரத்பவார் அளித்த விருந்து நிகழ்ச்சியில் நிதின்கட்கரியுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.