சொல் பேச்சை கேட்காமையால் சபை இடைநிறுத்தம்!!
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று (05) தீர்மானித்தனர்.
அதன்பிரகாரம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றம் இன்று (06) காலை 10 மணிக்கு கூடியது.
பிரதான நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவசரகாலச் சட்டம், பொலிஸ் ஊரடங்குச் சட்டம், பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்துக்குள் புகுந்த, இலக்கத் தகடு இல்லாத, முகமுடி அணிந்தவர்களால் ஓட்டிவரப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டார்.
அதற்கு, சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பதிலளித்தார். எனினும், மோட்டார் சைக்கிள் பற்றி வாயே திறக்கவில்லை.
இதனிடையே ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய சில எம்.பிக்கள் கருத்துகளை முன்வைத்தனர். விஜித ஹேரத், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கருத்துரைத்தனர். அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளித்தார்.
அவரது பதிலுரையை அடுத்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஜோன்ஸ்டனின் கூற்றுகளை மறுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.
விவாதத்துக்குச் செல்வோம், விவாதத்துக்குச் செல்வோம் என, சபாநாயகர் பலமுறை அறிவுரை கூறினார். அதனை நளின் பண்டார கேட்கவில்லை.
இதனிடையே எழுந்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அப்படியாயின், நளின் பண்டாரவின் உரையுடன் இன்றைய விவாதத்தை ஆரம்பிப்போம் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
அப்படி செய்ய இயலாது, ஒழுங்குப் பத்திரத்தின் பிரகாரம், இன்றைய நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நிவர்த்திச் செய்யவேண்டும். அதன்பின்னரே விவாதத்துக்குச் செல்லவேண்டுமென சபைக்கு அறிவித்தார்.
எனினும், நளின் பண்டார தனதுரையை நிறுத்துவதாய் இல்லை. தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் அவதானித்த சபாநாயகர், சபையை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
சுமார் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வு, 11.08க்கு மீண்டும் ஆரம்பமானது. பொதுமக்கள் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் தனிநபர் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னரே, இன்றைய விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.