நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு!!
தற்போது நம் நாட்டு மக்களுக்கு தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக ரீதியாக போராடி வருவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தமது கருத்துக்களையும் தேவைகளையும் ஜனநாயக ரீதியாக முன்வைப்பது அவர்களது உரிமையாகும். எனினும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது உயிர் மற்றும் உடைமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வன்முறையில் ஈடுபடாமலும், பொது மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமலும், இது தொடர்பான நாட்டு சட்டங்களை பேணியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன், எரிபொருள் பற்றாக்குறை, அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் துண்டிப்பு போன்ற பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்ளும் இத்தருணத்தில் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறும், ஜனநாயக ரீதியில் போராடிவரும் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாடு சுபீட்சம் பெற புனித ரமழான் மாதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது.