367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!!
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள், வெண்ணெய், பேரீச்சம்பழம், தோடம்பழம், தயிர், யோகட், சொக்லேட், கோர்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் பெஸ்தா ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகள் தண்ணீர் போத்தல்கள், பீர், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் முடிவெட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
மேலதிகமாக, அதே கட்டுப்பாடுகள் குளிரூட்டி, குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரம், வெதுப்பி, சமைப்பான், டோஸ்டர்கள் மற்றும் கோப்பி மற்றும் தேயிலை தயாரிக்க பயன்படும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
தொலைக்காட்சிப் பெட்டிகள், டிஜிட்டல் மற்றும் வீடியோ கெமராக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கருவிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.