;
Athirady Tamil News

நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு!! (படங்கள்)

0

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் கற்பாறை ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You might also like

Leave A Reply

Your email address will not be published.