;
Athirady Tamil News

நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே!!

0

“மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் தன்னெழுச்சி போராட்டம் வீரியம் பெற்று வருகின்றது. மக்களின், “கோட்டா போ” என்ற கோஷம் வலுப்பெறுகிறது. “ராஜபக்சாக்களை விரட்டி அடிப்போம், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறுவோம்” என்று பல மட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கிறது. ஆனால், அரசாங்கம் தனது வழமையான அசமந்த போக்கையும் இழுத்தடிப்பையும் செய்து வருகின்றது. வீதிகளிலே மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப போராடுகின்ற போது, அதற்கு மதிப்பளித்து, அரசியல் அமைப்பிற்கமைய, பாராளுமன்றத்தில் நாம் அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்காக நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். இதில் நடுநிலைமை என கூறி தலைமறைவாக முடியாது. நடுநிலைமை என்பதும் கள்ளர்கூட்டத்தை ஆதரிப்பதே ஆகும்.

இன்று முழு நாடும் போராட்ட களமாக மாறியிருக்கின்றது. நாளுக்கு நாள் பொருளாதாரம் மீள கட்டியெழுப்ப முடியாத அதளபாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. இவற்றுக்கு உடனடி தீர்வு அவசியம். மக்கள் கேட்பது, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், புதியதொரு இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்பது. அதற்கான உத்தியோகபூர்வ ஆரம்பமே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகும்.

பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளனர். இதனை எதிர்ப்பது என்பது நாட்டை புறம்தள்ளி, மக்களை புறம்தள்ளி, இன்று வீதியில் இறங்கி போராடும் இளைஞர் யுவதிகளின் கருத்தை, கோஷத்தை ஏளனப்படுத்தி, தமது சொந்த நலனுக்காக செயற்படுவதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.