சூடு பிடிக்கிறது புதிய அரசியலமைப்பு களம் !!
“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்போம்“ என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை உடனடியாக சமாளிக்க வேண்டிய தீர்மானங்களை கையாள்வதே சிறந்தது எனவும் 20 ஆம் திருத்தத்தை நீக்கி 19 ஆம் திருத்தத்தை கொண்டுவருவதே இப்போது தீர்வாக அமையும் எனவும் பிரதான எதிர்க்கட்சி உற்பட கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், நேற்று (18) கூடிய வேளையில் இந்த விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன.
“அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பலை அதிகரித்து செல்கின்றது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் கிடைக்கவில்லை. எனவே, இவ்வாறானதொரு நிலைமையில், தற்காலிக ஏற்பாடுகளை செய்து நிலைமைகளை கையாள்வதை விடவும் அரசியல் அமைப்பினை முழுமையாக மாற்றி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்றால் அதுவே சிறந்த தெரிவாக இருக்கும்“ என கருதுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலர் சபாநாயகரின் கருத்துடன் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. “தற்போதுள்ள நிலைமையில் உடனடியாக கையாள வேண்டிய விடயங்களை செய்வோம். 20 ஆம் திருத்த சட்டத்தை நீக்கிவிட்டு 19 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவருவோம். புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவதென்றால் அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை“ எனக் கூறியுள்ளனர்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மாற்றுக்கருத்தினை முன்வைத்து புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதே தீர்வாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் இன்றைய சூழ்நிலையில் நாடு போகும் போக்கில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்றால் அதற்கு சகல மக்களும் இரண்டு கைகளையும் தூக்கி தமது ஆதரவை வழங்குவார்கள். அடுத்த ஆறுமாத காலத்துக்குள் புதிய அரசியல் அமைப்பினையும் கொண்டுவந்துவிடலாம். ஆகவே புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இதுவே மிகச்சிறந்த தருணமாக இருக்கும்“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் எம்.பியின் கருத்துடன் ஆளுந்தரப்பு உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)
ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)
ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)