வவுனியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ9 வீதியின் குறுக்கே பேரூந்துகளை நிறுத்தி போராட்டம்!! (படங்கள்)
வவுனியா, மூன்றுமுறிப்பு, வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே இன்று (19.04) மாலை 4.30 மணியளவில் ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேரூந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு, பேருந்து கட்டணம் உயர்வில் திருப்தியில்லை, டீசலை பெற்றுக்கொள்ள எமக்கு எரிபொருள் நிலையமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேருந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
சம்பவ இடத்திற்கு வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியதுடன், தனியார் பேரூந்துகள் டீசலை பெற்றுக் கொள்வதற்கு தனியான ஓர் எரிபொருள் நிலையத்தினை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதியளித்தனர்.
இதனையடுத்து இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்துகளை செல்ல விட முடியாது என ஆர்ப்பாட்ட்காரார்கள் தடுத்து நிறுத்தியதுடன், ஏனைய வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். பேரூந்துகளை பொலிசார் மாற்று பாதை பயன்படுத்துமாறு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், வாகன சாரதிகள் சிலருக்கும் இடையில் வாய்தர்கங்கள், முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தன. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற நிலை காணப்படுவதுடன் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்னளனர்.