இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 2,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2,183 ஆகவும், நேற்று 1,247 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்றைய பட்டியலில் கேரளாவில் கடந்த 2 நாட்களில் பதிவான 488 பாதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டுவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மேலும் டெல்லி மற்றும் சில மாநிலங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தலைநகர் டெல்லியில் புதிய பாதிப்பு 501-ல் இருந்து நேற்று 632 ஆக உயர்ந்தது. அரியானாவில் 249, உத்தரபிரதேசத்தில் 159, மகாராஷ்டிரத்தில் 137, மிசோரத்தில் 125 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 47 ஆயிரத்து 594 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 34 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர மகாராஷ்டிரத்தில் 3, உத்தரபிரதேசத்தில் 1, நாகலாந்தில் 1, மிசோரத்தில் 1 என மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,22,006 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,547 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 12,340 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 480 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 17,23,733 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 4,21,183 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.29 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அங்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், டெல்லி- 4 மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளை செயல்படுத்தி கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.