ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறுங்கள்- இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்..!!
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஒலிப்பெருக்கிகள் மே 3ம் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் அனைத்து இந்துக்களும் சேர்ந்து அனுமார் மந்திரத்தை மசூதிகளுக்கு முன் ஒலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதையடுத்து எழுந்த சர்ச்சையில், அரசின் அனுமதியுடன் ஒலிபெருக்கி வைத்துகொள்ளலாம் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளும் கட்டாயம் அரசு அல்லது காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பாக ஜாமியாத்-உல்மா-ஐ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் குல்சார் அஸ்மி கூறுகையில்,
பெரும்பாலான மசூதிகள் காவல்துறையிடம் அனுமதி பெற்றபின்னரே ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இந்த மாநில காவல்துறையினர் ஒத்துழைப்புடன் இருக்கின்றனர். அதேபோல இந்த ஒலிபெருக்கி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவற்றை சிறப்பாக கையாளும் மகாராஷ்டிரா அரசை நான் பாராட்டுகிறேன்’
இவ்வாறு குல்சார் அஸ்மி கூறினார்.