37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகளில் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள்- ஒப்பந்தம் கையெழுத்து..!!
நாடு முழுவதிலும் உள்ள 37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகள் மற்றும் 12 ராணுவ சுகாதார மையங்களில் ஆயுர்வேத மையங்கள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம் ஆயுஷ் அமைச்சகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஒன்று 37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகளில் ஆயுர்வேத மையங்களைத் தொடங்குவதற்கும் மற்றொன்று ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் 12 ராணுவ மருத்துவமனைகளில் ஆயுர்வேத மையங்களைத் தொடங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் பங்கேற்றார்.