மோடி அரசின் 8 ஆண்டு சாதனைகள் மே 26-ந்தேதி வெளியிடப்படுகிறது..!!
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வெற்றி பெற்று முதன் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று 2-வது தடவையாக மோடி பிரதமர் ஆனார்.
அவர் பிரதமராக பதவி ஏற்று அடுத்தமாதம் (மே) 26-ந்தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட பா.ஜனதா முடிவு செய்து உள்ளது.
இதற்காக மத்திய தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மோடி அரசு இதுவரை செய்த சாதனைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்தது, போரின் போது உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்டு வந்தது, பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் காப்பீடு திட்டங்களால் பொதுமக்கள் அடைந்த பலன்கள், ஏழைகள் வீடுகள் கட்ட மானியம் அளித்து வருவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் இடம் பெற உள்ளது.
மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பிரதமரின் கனவு திட்டமான புல்லட் ரெயில், வந்தே பாரத் ரெயில், ரெயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள், காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்த அறிக்கையில் இடம் பெற உள்ளது.
எஸ்.சி.எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான திட்டங்கள் என பல அம்சங்கள் இடம் பெறுகின்றன.
பிரதமர் மோடியின் சாதனைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மோடி அரசு மூலம் பொதுமக்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள சாதனைகள் அடங்கிய அறிக்கை அவர் முதன் முதலாக பிரதமராக பதவி ஏற்ற நாளான அடுத்த மாதம் (மே) 26- ந் தேதி பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்படுகிறது. இதனை பிரதமர் மோடி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.