திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதில் கட்டுப்பாடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூடுதலாக எவ்வளவு லட்டுக்கள் கேட்டாலும் வழங்கப்பட்டு வந்தது.
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு சென்ற லட்சக்கணக்கான லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதாலும் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்கு வரும் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 66,745 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,780 பேர் முடி காணிக்கை செலுத்தினார். ரூ 5.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.