தலைநகர் டெல்லியில் பூஸ்டர் டோஸ் இலவசம் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது கொரோனா 3-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையோர் அரசின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் இதற்கான மருந்துகள் இலவசமாக வினியோகிக்கப்படும். கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சாிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.