;
Athirady Tamil News

டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரிக்க இது தான் காரணம்..!!

0

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி உள்ளது.

நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும் மாநிலங்களில் தலைநகர் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1009 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.இது முந்தைய தினத்தை விட 60 சதவீதம் அதிகம் ஆகும். இது மாநில அரசுக்கும், சுகாதார துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2.12 வகை தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே தற்போதைய தொற்று பரவலுக்கு இந்த ஒமைக்ரான் மாறுபாடே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தவிர ஒமைக்ரானின் மற்றொரு வழித்தோன்றலான பிஏ.2.12.1 வகை தொற்றும் சிலரிடம் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. எனினும் இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பிஏ.2.12 மற்றும் பிஏ.2.10 ஆகிய 2 துணை மாறுபாடுகள் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாதிரிகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இவை வேகமாக பரவுவது தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாறுபாடுகள் டெல்லியில் மட்டுமின்றி தலைநகரை ஒட்டியுள்ள அரியானா மற்றும் உத்தரபிரதேசங்களின் மாவட்டங்களிலும் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். டெல்லியின் தொற்று அதிகரிப்பு குறித்து மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘ஒமைக்ரானின் இனப்பெருக்க எண் 10 ஆக உள்ளது. இது அதிகம் பரவக்கூடிய அளவைக் கொண்டுள்ளது, எனவே அதன் வழித்தோன்றல்களும், துணை மாறுபாடுகளும் அதே வேகத்தைக் கொண்டிருக்கும்’ என்று தெரிவித்தார்.

கைகள் தூய்மையாக இல்லாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது, முககவசம் அணியாதது போன்றவற்றால் இது பரவும் எனக்கூறிய அவர், எனவே இவற்றை கடைப்பிடித்தால் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.