வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்..!!
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயவில்லை.
பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பின் வீரியம் குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி வேறு வடிவத்தில் பரவுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே கொரோனா வைரசின் உருமாற்றங்களான ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற வடிவங்கள் உலகம் முழுவதும் பரவி மக்களை நோயாளி ஆக்கியது.
இந்தியாவை பொறுத்தவரை முதல் மற்றும் 2-ம் அலைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய டெல்டா வகை வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் அதிகரித்து ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
ஆனால் ஒமைக்ரான் வகை பரவலால் நாடு முழுவதும் ஏற்பட்ட 3-ம் அலை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒமைக்ரானின் பரவல் வேகம் டெல்டாவை விட அதிவேகமாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுககு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக ஒமைக்ரான் பரவல் சில வாரங்களிலேயே பரவல் கட்டுக்குள் வந்தது.
இதனால் இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு சுமார் 2½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.
இதேபோல அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த உயர்வுக்கு காரணம் குறித்து சுகாதாரத்துறை நிபுணர்கள் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒமைக்ரான் மற்றும் அதன் இதர வடிவங்கள் தான் புதிய பாதிப்பு அதிகரிக்க காரணமாக உள்ளது என தெரிய வந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவமான ‘பி.ஏ.2.12.1’ வகை வைரஸ் என்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில், அங்கு நடத்தப்படும் பரிசோதனையில் சுமார் 75 சதவீத பாதிப்புகள் ‘பி.ஏ.2’ வகையை சார்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ‘பி.ஏ.2.12.1’ வகை தொடங்கி மொத்தம் 8 வகையான துணை வேரியண்டுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட மரபணு வரிசை முறை சோதனைக்கு பின்னர் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ஒமைக்ரான் பி.ஏ.1 வகை வேரியண்டை காட்டிலும் பி.ஏ.2 வேரியண்டு வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஷாகித் ஜமீல் கூறுகையில், பி.ஏ.2 வேரியண்ட், பி.ஏ.1 வகை வேரியண்டை விட 20 சதவீதம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகிறார்.
மேலும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் கூறி உள்ளார்.
தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை.
ஆனால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்களுககு எந்த விதமான சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை பொறுத்தே புதிய வடிவத்தின் பாதிப்பை கணக்கிட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சிகிச்சை முறைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
டெல்லியை போல மகாராஷ்டிரா, மிசோரம், அரியானா, உத்தரபிரதேசத்திலும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்கும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வுகளின் முடிவில் ஒமைக்ரானின் புதிய வடிவம் எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தெரிய வரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.