உக்ரைன் தாக்குதலில் சேதமான போர்க்கப்பல் – மாலுமி பலி, 27 பேர் மாயம் என ரஷியா ஒப்புதல்..!!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 59-வது நாளை எட்டியது. இந்தப் போரில் கருங்கடலில் இருந்து உக்ரைன் மீது கடல்வழி தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியது மோஸ்க்வா என்ற போர் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் முந்தைய சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இது 620 அடி நீளமும், 12 ஆயிரத்து 500 டன் எடையும் கொண்டதாகும். இதில் 500க்கு மேற்பட்ட சிப்பந்திகள் இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த வாரம் இந்த கப்பல் தீப்பற்றி வெடித்து பெருத்த சேதமடைந்தது. கப்பலில் இருந்த சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டதாக ரஷியா தெரிவித்தது. கப்பலில் இருந்த வெடிபொருட்கள் காரணமாக வெடித்ததாகவும் தெரிவித்தது.
ஆனால் , பாம்புத் தீவில் இருந்து தங்கள் நாட்டு எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி மோஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டதாக உக்ரைன் கூறியது. இந்தக் கப்பலை மூழ்கடித்து விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு உக்ரைன் தாக்குதலில் மோஸ்க்வா கப்பல் தீப்பற்றி சேதமடைந்தது என ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ரஷியா பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோஸ்க்வா போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 27 பேரை காணவில்லை. 396 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் பெருத்த சேதம் அடைந்திருப்பது ரஷியாவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.