மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பிரச்சினைக்கு நல்லிணக்க தீர்வு: பசவராஜ் பொம்மை..!!
கர்நாடகத்தில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மசூதிகளுக்கு கர்நாடக அரசு போலீஸ் மூலம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மசூதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வழிபாட்டு தலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸ் நிலைய அளவில் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒலிப்பெருக்கி பயன்பாட்டு விவகாரத்திற்கு நல்லிணக்கமாக தீர்வு காணப்படும். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.