அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து ராணுவம், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு..!!
ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்த 141 கிலோ மீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை
பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது. இதற்கானமுன்பதிவு இம்மாதம் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமர்நாத் ஆலய வாரியத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக பக்தர்கள் ஆன்லைனில் மூலம் பதிவு செய்யலாம்.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய காஷ்மீர் ரேஞ்ச் துணைக் கண்காணிப்பாளர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். யாத்திரை செல்லும் அனைத்து இடங்களிலும், போக்குவரத்து முகாம்கள் அமைப்பது, வாகன சோதனை உட்பட விரிவான பாதுகாப்பு குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருங்கிணைப்பு மற்றும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கேட்டுள் கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்முகாஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.