பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்: பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்..!!
நாடு முழுவதும் நாளை பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் நாளை நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவன உறுப்பினர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு
இதை தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் காஷ்மீர் பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக சஞ்வான் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.